திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் துரைசாமி, சோமசுந்தரம். துரைசாமி மீது கஞ்சா கடத்தல், கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5 கொலை வழக்குகள் என மொத்தம் 69 வழக்குகள் உள்ளன. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும் தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளன. இந்த நிலையில் அவர்கள் திருட்டு வழக்கில் தொடர்புடைய நகைகளை குழுமாயி அம்மன் கோயில் பகுதியில் மறைத்து வைத்திருப்பதாக காவல் துறையினர் விசாரணையில் தெரிவித்திருந்தனர்.
அதன் அடிப்படையில் அந்த நகைகளை மீட்க காவல் துறையினர், அவர்கள் இருவரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள குழுமாயி அம்மன் கோயில் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவர்கள் இருவரும் காவல் துறையினரை தள்ளிவிட்டு அவர்கள் ஜீப்பிலிருந்து இறங்கி அரிவாள் மற்றும் கத்தியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
அவர்களை விரட்டிப் பிடிக்கும் முயன்றபோது, குற்றவாளிகள் தங்களிடம் இருந்த அரிவாளால் காவல் துறை ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்களை வெட்டினர். அவர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் இருவரையும் காலில் சுட்டு அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி மாநகர காவல் துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்குச்சென்று குற்றவாளிகளையும், காவல் துறையினரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 கிளிகளால் ரூ.2.5 லட்சம் ஃபைன் கட்டிய ரோபோ சங்கர்.. முழு விபரம்