திருச்சி அருகே குண்டூரில் உள்ள எம்ஐஇடி பொறியியல் கல்லூரியின் 17ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, 391 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அதன்பின் அவர் பேசுகையில், “வேகமாக மாற்றங்களை சந்தித்து வரும் உலகில் நாம் இருக்கிறோம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை. மாணவ சமூகத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் நிலவும் சவால்களை சந்திக்க மாணவ மாணவிகள் ஆயத்தமாக இருக்க வேண்டும். பட்டம் பெற்றவர்கள் வேலையை பெறுகிறார்கள். ஆனால் அவர்களிடம் உண்மையிலேயே வேலைக்கான தகுதி உள்ளதா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
பட்டம் பெறுவது என்பது அடிக்கல் மட்டுமே. அதன் பின்னர்தான் வாழ்க்கையே ஆரம்பிக்கும். வாய்ப்பு என்பது அனைத்து பருவத்திலும் வராது. குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஈடுபாடுதான் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும். நம்மிடம் கல்வி தகுதி பெற்றவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அவர்களிடம் வேலை வாய்ப்பை பெறக்கூடிய அளவிலான தகுதிகள் இல்லை. தோல்வி, தடை, பிரச்னை ஆகியவற்றை கடந்து குறிக்கோளை நோக்கிய பயணத்தை நாம் தொடர வேண்டும்” என்றார்.