மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் இன்று (டிச. 15) நடைபெற்றது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுவதும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, திருச்சி மாவட்ட காவல் துறை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்த காவல் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது.
இதனையடுத்து காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.