தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சியில் (என். ஐ. டி திருச்சி) நாளை மறுநாள் (நவ. 7) சனிக்கிழமை என்ஐடி வளாகத்தில் உள்ள பார்ன் ஹாலில் 16ஆவது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
இதில், விப்ரோ லிமிடெட் நிறுவனர் மற்றும் தலைவர் அஸிம் பிரேம்ஜி முதன்மை விருந்தினராக கலந்துகொள்கிறார். என்ஐடி ஆளுநர் குழு தலைவர் பாஸ்கர் பட்டமளிப்பு விழாவை விழாவை தலைமை வகித்து நடத்தி வைக்கிறார். என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் அறிக்கையை அளித்து, பட்டங்களை வழங்குகிறார்.
இதுகுறித்து தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் மினி ஷாஜி தாமஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதன் முறையாக ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில், ஆயிரத்து 777 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது சாதனை எண்ணிக்கை.
இந்த பட்டமளிப்பு விழாவில் பி.டெக் படிப்புகள் (803), பி. ஆர்க் (38), எம்.ஆர்க் (17), எம்.டெக். (489), எம்.எஸ்.சி (67), எம்.சி.ஏ (85), எம்.பி.ஏ (72), எம்.எஸ் (33) பட்டதாரிகள் பட்டம் பெறுகின்றனர். கடந்த ஆண்டில் 98ஆக இருந்த முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 173ஆக உயர்ந்துள்ளது. 15 மாதங்களில் 76 விழுக்காடு அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.