திருச்சி: கடந்த 01.06.1994ஆம் ஆண்டு திருச்சி நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அன்றிலிருந்து கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் செங்கோல் இன்றி ஐந்து பெண் மேயர்கள் அவையை அலங்கரித்தனர். இந்நிலையில் திருச்சி மாமன்ற கூட்டம் இன்று (மார்ச் 28) கூடியது. மாமன்ற மேயருக்கு செங்கோல் இல்லாத நிலை இருந்து வந்ததின் அடிப்படையில், சேலம் (வடக்கு) சட்டப்பேரவை உறுப்பினர் இரா.ராஜேந்திரன் நான்கு கிலோ எடையுடன் கூடிய ஐந்து அடி உயரம் கொண்ட செங்கோலை நன்கொடையாக, நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கியிருந்தார்.
அமைச்சர் நேரு, அதனை திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தார். இந்தநிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான் முன்னிலையில் மேயர் மு.அன்பழகனிடம் செங்கோலை வழங்கினார்.இந்நிகழ்வில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி, துணை மேயர் திவ்யா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதல் கூட்டம் கூச்சல் குழப்பம் இல்லாமல் நடைபெற்றது. இதையடுத்து, வருகின்ற புதன்கிழமை (மார்ச் 30) கோட்டத்தலைவர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து மற்ற குழுக்களுக்கான தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 1 ரூபாய் நாணயங்கள் கொடுத்து ரூ.2.6 லட்சம் பைக் வாங்கிய இளைஞர்!