திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள ராஜாளிப்பட்டியைச் சேர்ந்தவர், ராம்கி (22). இவர் கவரப்பட்டியைச் சேர்ந்த, தனது மாமன், மகள் முறை கொண்ட சிறுமியை கடந்த ஓராண்டிற்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். அவ்வப்போது தனிமையில் நெருங்கி பழகி வந்ததால் ஐந்து மாதம் கர்ப்பமான சிறுமி, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு இளைஞரை வற்புறுத்தியுள்ளார்.
இதனை ஏற்க மறுத்து தலைமறைவான ராம்கியை கைது செய்யக்கோரி, சிறுமி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார்.
இருப்பினும் சம்பந்தப்பட்ட இளைஞரைக் கைது செய்யாத காவல் துறையைக் கண்டித்து நேற்று முன்தினம் (ஜூலை 6) பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களுடன் காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா, தலைமறைவாக இருக்கும் இளைஞரை இன்னும் இரண்டு நாள்களில் கைது செய்வதாக கூறியதையடுத்து, பெண்ணின் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் அந்தச் சிறுமி இன்று (ஜூலை 8) அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை உண்டுள்ளார். இதனையடுத்து பெற்றோர் சிறுமியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். தற்போது சிகிச்சைப் பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.
மணப்பாறை காவல் துறையினரின் அலட்சியத்தால், சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு: பேரூராட்சி ஊழியர் கைது!