திருச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சிறு குறு, நுண் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் முகாம் கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வங்கியின் மேலாண்மை இயக்குநர் கர்ணம் சேகர், நிர்வாக இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவத்சவா, துணை பொது மேலாளர் சதானந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக வங்கியின் மேலாண்மை இயக்குநர் கர்ணம் சேகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இதுவரை 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை சிறு குறு, நுண் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதை 50 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயம்செய்யப்பட்டு அதற்கேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக சிறு, குறு, நுண்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களை நேரடியாக சந்திக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இன்று திருச்சியில் 250 வாடிக்கையாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு 30 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது.
வங்கி ஊழியர்கள் 50 பேர் வீதம் தற்போது வரை 500 பேருக்கு இத்தகைய தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் மூன்றாயிரத்து 300 கிளைகள் உள்ளன. எனினும் இத்தகைய தொழில் நிறுவனங்களுக்காக 200 கிளைகள் தேர்வுசெய்யப்பட்டு, அதில் பயிற்சிபெற்ற வங்கி ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
தமிழ்நாட்டில் கோவை, திருச்சி, சென்னை போன்ற தொழில்சார்ந்த நகரங்களில் இத்தகைய கிளைகள் திறக்கப்பட்டு பயிற்சிபெற்ற ஊழியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் தொழில் நிறுவன உரிமையாளளுடன் நெருங்கிப் பழகி எங்களிடம் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் இத்தகைய கடன் வழங்கும் திட்டங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சிறு குறு, நுண் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நோக்கம் எங்களது பிரதான நோக்கமாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:
ஐம்பதாயிரம் பெண் பயனீட்டாளர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி - ஐஓபி சாதனை