தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி உறையூர், ஹவுசிங் போர்டில் ஒரு வீட்டில் கேரளா ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் என்னும் பெயரில் போலியான மசாஜ் சென்டர் இயங்கி வந்தது.
தடை உத்தரவை மீறி மசாஜ் சென்டரில் மசாஜ் செய்வதாகவும், அரசிடம் முறையான அனுமதி பெறாமல் மசாஜ் சென்டர் நடத்திவருவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் தகவலையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின் பேரில், திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் ஆய்வு செய்தார். ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது மசாஜ் சென்டரில் வேலை பார்த்த பெண்கள், மேலாளர் ஆகியோர் பின் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உரிய ஆவணமின்றி இந்த மையம் செயல்பட்டு வந்ததையடுத்து தாசில்தார் முன்னிலையில் மசாஜ் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.