சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் மாநில பல்கலைக்கழகங்களில் அனைவருக்கும் பயோமெட்ரிக் வருகை பதிவேற்றும் முறை பின்பற்ற வேண்டுமென உயர் கல்வித்துறை செயலாளர் பல்கலைக்கழகங்களில் பதிவாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதாவது, பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பணிக்கு குறிப்பிட்ட நேரத்தில் வராமல் தங்களது சொந்த பணிக்கும் செல்வதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளன. மேலும், கல்லூரியில் ஆசிரியர்கள் இல்லாத சூழ்நிலை போன்ற நேரங்களில் மாணவர்களிடையே மோதல் போக்கும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உயர் கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தாமதமாக வருவதும், அனுமதியின்றி வெளியே செல்வதும், பல்கலைக்கழகத்தை விட்டு பல்கலைக்கழக நேரத்திற்கு முன்பாகவே வெளியே புறப்பட்டுச் செல்வதும் கவனத்திற்கு வந்துள்ளதாக உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தன்னுடைய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் மாநில பல்கலைக்கழகங்களின் பதிவாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பல ஆசிரியர்கள்,ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதையும், உரிய அதிகாரியின் முறையான முன் அனுமதியின்றி அலுவலகத்தை விட்டுச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.
மேலும்,இதுபோன்ற செயல்கள் கல்வி நிறுவனம் மற்றும் நிர்வாகத்தின் மீது விரும்பத்தகாத நிகழ்வுகளை ஏற்படுத்தும், மேலும் மாணவர்களின் அமைதியின்மை, போராட்டம், காலவரையற்ற வேலைநிறுத்தம், ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான கசப்பான உறவு போன்றவற்றை நேரிடலாம். எனவே, பல்கலைக்கழகங்களில் உள்ள ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் நலன் கருதி மாற்று ஏற்பாட்டை உருவாக்குவது கட்டாயமாகும்.
பல்கலைக்கழகங்கள் சுமுகமாகச் செயல்படும் வகையில், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாதோர் பணிக்கு முறையாக வருவதை உறுதி செய்வதற்காக பயோமெட்ரிக் வருகை பதிவை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது சம்பந்தமாக, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழையும் போது பயோமெட்ரிக் கருவியில் தங்கள் இருப்பைப் பதிவு செய்து, பணி முடிந்ததும் அதையும் இந்த கருவியில் பதிவு செய்த பின்னரே வெளியேற வேண்டும்.
மேலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கோப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான மின்-அலுவலக அமைப்பு, தனிப்பட்ட தகவல் அமைப்பு மற்றும் பல்கலைக்கழக இணையதளத்தைப் புதுப்பித்துப் பராமரித்தல், அனைத்து உத்தரவுகளையும் இணையதளத்தில் அவ்வப்போது பதிவேற்றவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்