திருச்சி: மேகதாதுவில் காவேரியின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு நிதி ஒதுக்கியதை கண்டித்து மற்றும் தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்கள் மற்றும் ஊரணிகளில் மண்டிக்கிடக்கும் கருவேல முள் செடிகளை அகற்ற முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு இன்று (மார்ச். 7) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் விஸ்வநாதன், "தமிழ்நாடு முழுவதும் பஞ்சாயத்துகளின் கட்டுப்பாட்டில் 25 ஆயிரம் ஏரி, குளங்கள், ஊரணிகள் உள்ளன. இதில் கருவேல முள் செடிகள், காட்டாமணக்கு செடிகள், வெங்காயத் தாமரை அதிகமாக காணப்படுகிறது.
இவற்றை கோடை காலங்களிலேயே அழிக்க வேண்டும். ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலைகளின் கரையை பலப்படுத்தி ஆழப்படுத்த வேண்டும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக நீதிமன்றத்தின் மூலம் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்"என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் நாட்டிலேயே முதல்முறையாக சர்வதேச அறைகலன் பூங்கா: இதிலுள்ள முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?