விவசாய மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க தலைவர்கள் ஒன்றிணைந்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. நிகழ்வுக்கு கட்சியின் மாநில தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். தேசிய தென்னிந்திய நதிகள் பாதுகாப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பேரிடருக்கு எதிரான பேரியக்கத் தலைவர் லெனின் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் இவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,
விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்க வேண்டும். இந்த விலை நிர்ணயம் செய்யும் வரை கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.அதன் பின்னர் எங்களுக்கு கடன் தள்ளுபடி வழங்க வேண்டியதில்லை. தனி நபர் காப்பீடு வழங்க வேண்டும். நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகளை ஏற்காத அரசியல் கட்சிகளுக்கு எதிராக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளப்படும். இந்தக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் அவர்களை எதிர்த்து பரப்புரை செய்வோம் என்றும் கூறினார்.