ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நாடு முழுவதிலும் இருந்து இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவார்கள். இந்த ஆண்டிற்கான விழா வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துவருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோயிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள், குடியிருப்புப் பகுதிகள், வணிக நிறுவனங்கள், சாலையோர ஆக்கிரமிப்புகள் ஆண்டுதோறும் அகற்றப்படும். இந்த வகையில் இன்று திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் வைத்தியநாதன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் கொண்டு ஆக்ரமிப்புகளை அகற்றினர்.
ஏற்கனவே, அப்பகுதி வர்த்தகர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், நேற்று தண்டோரா போட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதன் பின்னரும் அகற்றப்படாத ஆக்கிரமிப்பு கட்டடங்கள், கொட்டகைகள் அகற்றப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தியிருந்தனர். சில இடங்களில் ஆக்ரமிப்பாளர்கள் மாநகராட்சி அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: #CAA PROTEST டெல்லியில் மயானா அமைதி நிலவுகிறது - தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு குற்றச்சாட்டு!