தினமலர் பங்குதாரர் மறைந்த ஆர். ராகவனின் மனைவி சுப்புலட்சுமி (77) நேற்று மாலை காலமானார். தினமலர் திருச்சி, வேலுார் பதிப்புகளின் ஆசிரியர்களான முனைவர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஆர்.ஆர். கோபால்ஜி இருவரும் இவரது மகன்கள் ஆவர்.
நாகர்கோவிலில் சுப்பிரமணி அய்யர், வேங்கடலட்சுமி தம்பதிக்கு 1943இல் பிறந்தவர் சுப்புலட்சுமி. தினமலர் பங்குதாரர் ஆர். ராகவனை 1964இல் மணந்துகொண்டு தன் இரண்டு மகன்களுடன் திருச்சியில் வசித்துவந்த இவர், நேற்று மாலை இயற்கை எய்தினார்.
சுப்புலட்சுமியின் இறுதி சடங்குகள், இன்று மதியம் 3 மணிக்கு திருச்சி கன்டோன்மென்ட், பேர்ட்ஸ் ரோடு இல்லத்தில் நடைபெறுகிறது. மதியம் 3:30 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்கி, ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை மயானத்தில் தகனக் கிரியைகள் நடைபெறவுள்ளது.
மறைநந்த சுப்புலட்சுமியின் உடலுக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள், உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் வரதராஜு, திருச்சி மத்திய மண்டல ஐ. ஜி அமல்ராஜ், பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இன்று மதியத்திற்கு மேல் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்துவதற்காக வருகைதர உள்ளனர்.
இதையும் படிங்க: மூதாட்டி கழுத்து அறுத்துக் கொலை; சிக்கியது சிறுவனின் சிசிடிவி காட்சி