திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன்(எ)கொம்பன் ஜெகன் (வயது 30). திருச்சியில் பிரபல ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்தன. கடந்த மே 19 ஆம் தேதி அன்று ஜெகன் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்காக அவரது வீட்டில் கூட்டாளிகளுக்கு கறி விருந்து ஏற்பாடு செய்து உள்ளார்.
அதில் அவரது கூட்டாளிகள் 9 பேர் பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து கலந்து கொண்டனர். இதனை பயன்படுத்திக் கொண்ட திருவெறும்பூர் காவல்துறையினர், அனைவரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இதில் தப்பியோடிய ஜெகனை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று (நவ. 22) திருச்சி மாவட்டம் சமயபுரம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சனமங்கலம் என்ற பகுதியில் பதுங்கியிருந்த கொம்பன் ஜெகன் என்கின்ற ஜெகனை காவல்துறையினர் பிடிக்க முயன்ற போது, தப்பிக்க முயன்ற அவர், போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
காவல்துறையினரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்ற போது, ரவுடி ஜெகனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். இந்த மோதலில் ரவுடி தாக்கியதில் காவல் உதவி ஆய்வாளர் வினோத்துக்கு இடது கையில் காயம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் வினோத்தை திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மற்றும் டிஐஜி பகலவன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு உடல்நலம் குறித்து விசாரித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஐஜி பகலவன் கூறியதாவது, "திருச்சி ரவுடி கொம்பன் என்கின்ற ஜெகன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பொறுத்தவரை, அவரை தேடிச் சென்ற இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைத்துப்பாக்கி, மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து தாக்கவும் முற்பட்டார். இதில் காவல் உதவி ஆய்வாளர் வினோத் காயமடைந்துள்ளார். காயமடைந்துள்ள உதவி ஆய்வாளர் நலமுடன் உள்ளார். திருச்சி மாவட்டத்தில் ரவுடிசத்திற்கு இனி இடம் கிடையாது. இது போன்ற எண்ணம் உடையவர்களை ஒருபோதும் காவல்துறை அனுமதிக்காது.
அப்படி சுற்றித் திரிபவர்களுக்கு நடவடிக்கை கடுமையாக இருக்கும். கடந்த மூன்று, நான்கு நாட்களாக ரவுடிகளை ஸ்பெஷல் பிராஞ்ச் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். அந்த வகையில் சனமங்கலம் பாரஸ்ட் ஏரியாவில் துப்பாக்கியுடன் பணப் பறிப்பு, உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அங்கு பன்றி மேய்க்கும் தொழிலாளர்களிடமிருந்து தகவல் கிடைத்தது.
அப்பகுதியில் சமூக விரோதிகள் அராஜகம் செய்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோது, பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடியான ஜெகன் அங்கு இருந்தார். தேடப்பட்ட குற்றவாளி என்பதால் அவரை பிடிக்க தகவலின் அடிப்படையில் சென்ற காவல் துறையினர் முற்பட்டனர்.
அப்போது துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு தாக்க முற்பட்டார். இதனால் காவல்துறையினர் தற்காப்பிற்காகவும் அவரை பிடிக்கவும் என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டர் செய்யப்பட்ட ஜெகன் மீது நான்கு கொலை வழக்கு 6 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 50 வழக்குகள் உள்ளன.
இதில் 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் தாதாக்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் ரவுடிசத்திற்கு வேலை இல்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பெரும்பாக்கம் ஏரி மதகு உடைந்து நீர் வெளியேற்றம்! 200 ஏக்கர் விவசாய நிலம் சேதம்! நீரில் மூழ்கிய நெற்பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை!