திருச்சி: கிராமங்களில் விவசாயிகள் கரும்புகளை பயிரிட்டு பார்த்திருப்போம். ஆனால், திருச்சி மத்திய சிறையில் (Trichy Central jail) உள்ள கைதிகள் கரும்பு பயிர்களை பயிரிட்டு முறையாக அவற்றைப் பராமரித்து இந்தாண்டு பொங்கலுக்காக அறுவடையும் செய்து விற்பனைக்கு தயார் செய்து வருகின்றனர். சிறைத்துறையின் முழு ஒத்துழைப்பில் சிறைக் கைதிகள், சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறைத்தோட்டத்தில் சுமார் 24 ஏக்கர் நிலப்பரப்பளவில் பலரும் இவ்வாறு வேளாண்மை செய்து கொய்யா, பலா உள்ளிட்ட மரங்களையும்; கத்தரிக்காய், தக்காளி, பூசணிக்காய் உள்ளிட்ட பல காய் வகைகளையும் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தாண்டும் தாங்கள் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட கரும்புகளை தற்போது அறுவடை செய்யும் பணியில் சிறைவாசிகள் இறங்கியுள்ளனர். கடந்த மார்ச் மாதம் கரும்பு பயிரிடும் பணி, திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை துணைத் தலைவர் ஜெயபாரதி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், 'பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் கொண்டாடப்படும் அறுவடை திருநாள். இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சிறைவாசிகளை கொண்டு கரும்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு வந்துள்ளது. மத்திய சிறை வளாகத்தில் பயிரிடப்படும் கரும்பை சிறை அங்காடி மூலமாக பொதுமக்கள் வாங்கி செல்வதற்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கரும்பு விற்பனையானது அரசுக்கு லாபம் ஈட்டும் வகையிலும் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த விலையிலும் கரும்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரும்பு விற்பனையில் வரும் ஒரு பகுதியை சிறைவாசிகளின் ஊதியமாக வழங்க இருக்கிறோம்.
மேலும் மத்திய சிறை வளாகத்தில் வழங்கப்படும் கரும்பை ஆண் சிறைவாசி, பெண் சிறையில் இருக்கும் பெண் சிறைவாசிகளுக்கு வழங்கப்பட இருக்கிறோம்.சிறையில் பணி புரியும் சிறைவாசிகளுக்கு மன அழுத்தம் இன்றி இங்கு பணி புரியவும் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே சென்ற அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உறுதுணையாக இருக்கும்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. களைகட்டிய பொங்கல் சந்தை..!