திருச்சி சர்வதேச விமான நிலைய ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஆச்சர் சிங், பேட்ரிக் ராஜ்குமார் ஆகியோர் இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேட்ரிக் ராஜ்குமார், வரும் மார்ச் 28ஆம் தேதி முதல் திருச்சி-டெல்லி, திருச்சி-அபுதாபி, திருச்சி-தோஹா இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் புதிதாக மூன்று விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.
அதற்காக முயற்சி எடுத்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், விமான நிலைய ஆலோசனைக்குழு தலைவருமான திருநாவுக்கரசருக்கு நன்றி. திருச்சியிலிருந்து ஹைதராபாத், திருப்பதி, அகமதாபாத், பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியைச் சுற்றியுள்ள ஒன்பது மாவட்டங்களில் இரண்டு கோடி மக்கள் உள்ளனர். பெங்களூருவிலிருந்து வேளாங்கண்ணிக்கு தினமும் இரண்டாயிரத்து 500 பக்தர்கள் வந்துசெல்கின்றனர். அதனடிப்படையில், திருச்சியிலிருந்து பெங்களூருவுக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு விமானம் இயக்கினாலும் பயணிகள் வருகை நல்லமுறையிலிருக்கும்.
குறைந்தபட்சம் தினமும் எட்டு விமான சேவைகளை பெங்களூருவுக்கு வழங்கலாம். அதனால் திருச்சியிலிருந்து பெங்களூருவுக்கு விமான சேவையை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அது தொடர்பாக தனியார் விமான நிறுவனங்களையும் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இயக்கப்பட்ட பல்வேறு விமான வழித்தடங்களை ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்திவிட்டது. அவற்றை மீண்டும் இயக்கவும், புதிதாக விமான சேவைகளை வழங்கவும் ஏர் இந்தியா நிறுவனத்திடமும் வலியுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அகமதாபாத் வந்திறங்கிய நான்காவது அமெரிக்க விமானம்!