ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் குடும்பங்களுக்கு தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) திருச்சி - தஞ்சை திருமண்டல பேராயர் சந்திரசேகரன் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
“திருச்சி - தஞ்சை திருமண்டலத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், திருப்பூர், கோவை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 10 மாவட்டங்கள் உள்ளடக்கியதாகும்.
இதில் தென்னிந்திய திருச்சபையின் திருச்சி - தஞ்சை திருமண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி துறை சார்பில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி முதல் மே 5ஆம் தேதி வரை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2 ஆயிரம் காவல்துறையினர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நலப்பணியாளர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வ பணியாளர்கள் ஆகியோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும் விதவைகள், பாலியல் தொழிலாளர்கள், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியை சுற்றி உள்ள ஏழை மக்கள், செம்பட்டு, தாயனூர், அம்மாபேட்டை, பெட்டவாய்த்தலை பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், எச்.ஐ.வி தொற்று உள்ளோர், திருநங்கைகள், மனநலம் குன்றியோர், முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள், நரிக்குறவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் நிவாரண பொருட்கள் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.
கரோனா தடுப்புக்கு மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளது. குறிப்பாக இந்த தடுப்பு பணியில் மக்களை பங்கேற்க செய்யும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை சிறந்த முறையில் உள்ளது. நாங்கள் எப்போதும் மதுவிலக்குக்கு ஆதரவானவர்கள். அதனால் தற்போது உள்ள சூழ்நிலைக்கு பதிலளிக்க வேண்டியதில்லை” என்றார்.
குருத்துவ செயலாளர் சுதர்சன், பெண்கள் ஐக்கிய சங்க தலைவி ரோசலிண்ட், பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பால் தயாபரன், சமூகப்பணி துறை தலைவர் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: எந்த நேரத்திலும் பேருந்துகள் இயக்க தயார் - மண்டல போக்குவரத்து அலுவலர் தகவல்