திருச்சியில் சௌபாக்கியா திருமண மண்டபத்தில் டிசைன்ஸ் பள்ளி சார்பில் ஓவியக் கண்காட்சி இன்று தொடங்கியது. இதை ஓவியர் ஷ்யாம் தொடங்கி வைத்தார். யோகா குரு விஜயகுமார், பள்ளி தாளாளர் மதன், இயக்குநர் நஸ்ரத்பேகம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி ஜூலை 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இலவச கண்காட்சியைத் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை பார்வையிடலாம்.
கண்காட்சியில் மாணவர்கள் தீட்டிய 160 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து, டிசைன் பள்ளி இயக்குநர் நஸ்ரத் பேகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருச்சி டிசைன்ஸ் பள்ளி சார்பில் ஆண்டுதோறும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. 9ஆவது ஆண்டில் பாரதியார் குறித்து குழந்தைகள் அறியும் வண்ணம் கண்காட்சி நடத்தப்படுகிறது. பாரதியார் குறித்த தகவல்கள் தற்போதைய குழந்தைகள் மத்தியில் அறியாத நிலை உள்ளதால் பள்ளி மாணவ மாணவிகள் தீட்டிய பாரதியார் குறித்த ஓவியங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.
குழந்தைகள் பாரதியார் குறித்து அறிந்து கொண்டால் மற்றவர்களுக்கு எளிதில் பரவும் என்ற நோக்கத்துடன் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதியாரின் அனுபவங்களும், கவிதைகளும் வாழ்க்கைக்குப் பயன்படக் கூடியது என்பதை எடுத்துரைக்கும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. அதோடு பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியும் நடத்தப்படுகிறது. இதில் 35 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர்.”, எனக் கூறினார்.