கரோனா தொற்று நோய் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி வரையிலான 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்த மாத தொடக்கத்தில் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மூலம் கரோனா தொற்று பரவியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத்தொடர்ந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களை அடையாளம் காணும் பணி நாடு முழுவதும் நடைபெற்றது. அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த 71 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து இவர்களை மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு சுகாதாரத் துறை பணியாளர்கள் அழைப்பு விடுத்தனர். இன்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு 63 பேர் பரிசோதனைக்காக வந்தனர். அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பின்னர் ரத்தம், சளி மாதிரிகளை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மீதமுள்ள எட்டு பேரை அடையாளம் காணும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. திருச்சி மாநகரில் இருந்து மட்டும் 71 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். திருச்சி மாநகரில் உறையூர், பாலக்கரை, ஆழ்வார்தோப்பு, காஜாமலை, காஜா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கலந்துகொண்டுள்ளனர். இதேபோல் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துவரங்குறிச்சி, புத்தாநத்தம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியிருப்பது தெரியவந்தது. பரிசோதனை செய்யப்பட்டதில் 63 பேர் தற்போது கரோனா பிரத்தியேக வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுகாதாரத் துறை வெளியிட உள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையில் ஏற்கனவே எட்டு பேர் கரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் துபாயில் இருந்து திரும்பிய ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கியூ பிரிவு காவல் துறையின் உதவியை நாடும் அரசு