திருச்சி :தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி அச்சங்கத்தின் மாநில அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாநில விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"ஐடி ஆளுங்களையே தாக்குவீங்களா?" - மத்திய அரசுக்கு ஆலோசனை கொடுக்கும் ஈபிஎஸ்..!
அதனை தொடர்ந்து, இந்த கூட்டத்தில் விவசாயிகள் நலன் குறித்தும், தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பிரதமர் மோடி அறிவித்த விவசாய விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபம் மற்றும் கரும்புக்கு லாபகரமான விலை இன்றும் வழங்க வில்லை என தெரிவித்த விவசாயிகள், அதேபோல, மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்த படி கோதாவரி தண்ணீரை தமிழகத்திற்கு வழங்கவும் இல்லை என குற்றம் சாட்டினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஜுலை 1ஆம் தேதி முதல் டெல்லியில் கலவரையற்ற போராட்டம் நடத்தலாம் என விவசாயிகள் ஒன்று கூடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் இந்த போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அய்யாக்கண்ணு, இந்த போராட்டத்தை தமிழக போலீஸார் நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என கூறியுள்ளார். அது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள் முதல் நிலையத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டிய அய்யாக்கண்ணு இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வுகாண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேபோல விவசாயிகளுக்கு தனிநபர் காப்பீடு, வன விலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பாதிப்புகள், உயிர் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு உள்ளிட்டவைகளை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அய்யாக்கண்ணு, இல்லை என்றால் தமிழக அரசை கண்டித்து சென்னையிலும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமின்றி, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட தமிழக விவசாயிகள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்த அய்யாக்கண்ணு, உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவின் படி 177 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விபத்தால் கால் இழந்த பூ வியாபாரி - காப்பீட்டுத் தொகையை அதிகரித்து உத்தரவு..