திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் ஆழ்வார் தோப்பு, எம்.ஆர். மில் ஆகிய பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பால் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
அதேபோல் வரகனேரி பகுதியில் கடந்த இரண்டு மாதமாக இப்பிரச்னை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் திடீரென்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணியாளர்கள் ஆய்வுக்கு வந்தபோது அங்குள்ள பொதுமக்கள் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது செல்போன் கோபுரம் அமைக்க இடமளித்த உரிமையாளருக்கும் அப்பகுதி மக்களுக்கும் பெரும் வாக்குவாதம் நடைபெற்று மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
இருப்பினும் இது சம்பந்தமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டார் கோல்ட் உரிமையாளர் மஜீத், வெல்ஃபேர் கட்சி தலைவர் முகம்மது வாசிக், செயலாளர் அப்துல் அக்கீம், மாவட்டத் தலைவர் பூக்கடை சாகுல் அமீது மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி நல்ல முடிவை எடுக்குமாறு வலியுறுத்தினர்.