தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் தியாகராஜ பாகவதர். மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர், தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கலைஞர் ஆவார்.
1934ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, வெறும் 14 திரைப்படங்களில் மட்டுமே நடித்து சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் நிறைந்து நின்ற பாகவதர், 1959ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி மறைந்தார். அவரது உடல் திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரி துறை சாலையில் உள்ள விஸ்வகர்மா ருத்ர பூமியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது 60ஆவது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி சங்கிலியாண்டபுரத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் விஸ்வகர்மா மகாஜன சபை சார்பில் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி எடத்தெரு விஸ்வகர்மா மகாஜன சபை தலைவர் குமரப்பன், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் வெள்ளையன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். முன்னதாக விஸ்வகர்மா மக்கள் எழுச்சி இயக்க மாநிலத் தலைவர் பாண்டித்துரை சங்கக் கொடியை ஏற்றி வைத்து தியாகராஜ பாகவதர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.