திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டு, கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் பிருந்தா தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் மணப்பாறை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லாட்டரி விற்பனையில் ஈடுபட்டுவந்த நொச்சிமேடு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி (40), மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ஜான் பெர்க்மான்ஸ் (52), இந்திரா நகரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (47) ஆகியோரை கைதுசெய்து அவர்களிடமிருந்து ரூ.6,530 ரொக்கம், மூன்று செல்போன்கள், ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல்செய்தனர்.
இதேபோல் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனை செய்துவந்த திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் மணிகண்டன் (29), மாணிக்கம் மகன் ராஜ்குமார் (24) ஆகியோர் கைதுசெய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து ரூ.790, ஒன்பது குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்தவர் கைது!