திருச்சி : மணப்பாறை அருகே விடத்திலாம்பட்டி மலைப்பகுதியை ஒட்டி செம்மண் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்பேரில் சம்பவயிடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான காவல் துறையினர் அங்கு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது காவல் துறையினரை கண்டு, வாகன ஓட்டுநர்கள் சிலர் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் நம்பம்பட்டியைச் சேர்ந்த கார்மேகம், உசிலம்பட்டியைச் சேர்ந்த சங்கர், கல்பாளையத்தான்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, செம்மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு ஜேசிபி, ஒரு டிப்பர் லாரி ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும், தப்பியோடிய ஜேசிபி உரிமையாளர் கன்னி ராஜாபட்டியை சேர்ந்த ராஜகோபால், லாரி உரிமையாளர் உசிலம்பட்டியைச் சேர்ந்த மணி ஆகிய இருவரையும் காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : சென்னை ஐ.ஐ.டி.யில் ஊரகத் தொழில்நுட்ப மையம் தொடக்கம்