பிரபல நிறுவனங்களின் ( சோனி) விலையுயர்ந்த ஸ்மார்ட் டிவியை, குறைந்த விலைக்கு விற்பனை என்ற பெயரில் போலி விளம்பரம் செய்யப்பட்டது. இதில் சாதாரண தொலைக்காட்சிகளுக்குப் பிரபல நிறுவனங்களின் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவுப்படி தனிப்படை காவல் துறையினர் திருச்சி பீமநகர் பழைய தபால் அலுவலகச் சாலையிலுள்ள ஒரு குறிப்பிட்ட கடையைச் சோதனை செய்தனர்.
அங்கு வெளிமாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட தொலைக்காட்சிகளை பிரபல நிறுவனத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டி குறைந்த விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக பீமநகரைச் சேர்ந்த நிஜாமுதீன், முகமது பைசல் மற்றும் திருச்சி வயலூர் ரோடு இரட்டை வாய்க்காலைச் சேர்ந்த சரவணன் ஆகிய மூவரை கைது செய்து, அந்தக் கடையில் இருந்த ரூ. 61 லட்சம் மதிப்பிலான 153 போலி தொலைக்காட்சிகள், உபகரணங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
பின்னர் மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.