திருச்சி: தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் சரீப் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் மதவெறி, மத மோதல்களைத் தூண்டிவிடும் வகையில் செயல்படும் பாஜக - அதிமுக கூட்டணியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.
பாஜக தமிழ்நாட்டில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி, பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும்.
திமுக -அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சியை தமிழக மக்கள் பார்த்துவிட்டனர். அதன் விளைவுகளையும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கடுமையாக அனுபவித்துவிட்டனர். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மூண்றாவது அணி உருவாக வேண்டும் என்ற விருப்பம் அனைவர் மத்தியிலும் உள்ளது.
இதற்காக டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவற்றை இணைத்து மூன்றாவது மாற்று அணியை அமைக்க வேண்டும். இதற்காக டிடிவி தினகரன், சசிகலா, கமல் ஹாசனையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். மாற்று அணிக்கு மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள்.
இந்த அணி அமையவில்லை என்றால், முன்னதாக திட்டமிட்டபடி பாஜகவை எதிர்த்து அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர். தமிழகத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் (மார்வாடிகள்) போலி பொருள்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களுக்கு போலி பொருள்களைத் தயாரித்து, அவர்களது வாழ்வாதாரத்தை சீரழிக்கின்றனர். இவர்களை எதிர்த்து இரண்டாம் கட்டப் போராட்டம் விரைவில் நடத்தப்படும்" என்றார். இப்பேட்டியின்போது திருச்சி மாவட்ட தலைவர் ராயல் சித்திக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.