கரோனா வைரஸ் நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 834 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் சமய மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களே அதிகமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திருச்சி விமானக நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது. டெல்லி சென்று வந்தவர்ககளிடமும் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது, திருச்சியில் இதுவரை 36 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் துபாயிலிருந்து வந்த ஈரோட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்தார். அதேபோல் கரூரைச் சேர்ந்த ஒருவரும் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது, ஈரோடு இளைஞர் பூரண குணம் அடைந்துள்ளார். அவரை வீட்டிற்குத் திரும்பிச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்ட அந்த இளைஞர் இன்று மதியம் முழு கவச உடையுடன் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ஈரோட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பிச் சென்ற அந்த இளைஞரை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களும் உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: வேலை கிடைக்காமல் தவிக்கும் சாலையோரவாசிகள் - கண்டுகொள்ளுமா அரசு?