கரூர்: கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, உசிலம்பட்டி, சீகம்பட்டி, எப். கீழையூர், பொடஹ்குபபட்டி, சாம்பட்டி, சூளியாபட்டி, பொய்கைபட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலுள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, சாம்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் புற்றுநோய், இருதயம், மூளை, சிறுநீரக பாதிப்படைந்தவர்கள் இருந்து தன்னிடம் தெரிவித்தால் அரசு மூலம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி பெற ஏற்பாடு செய்து தரப்படும்.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக தேவையான உபகரணங்கள் வழங்கப்படும், அல்லது அறுவை சிகிச்சை அளித்து அவர்களுக்கு உரிய நிதியுதவி அளிக்க நடவடிக்கை எடுத்து தரப்படும் என்றார்.
இதையடுத்து அவரிடம் பேசிய சாம்பட்டி பொதுமக்கள், தங்கள் பகுதியில் வழங்கப்படும் ரேஷன் அரசி சாப்பிட முடியாத அளவிற்கு தரமற்று இருப்பதாகவும், திருமலையான்பட்டி பொதுமக்கள் நியாய விலைக் கடைக்கு மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கிவர மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, உரிய அலுவலர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் ஜோதிமணி உறுதியளித்தார்.
இதையும் படிங்க: வருகின்ற தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - எம்.பி. ஜோதிமணி