திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்தையாவிற்கு தொட்டியம் அருகே உள்ள செவந்திபட்டியில் இருந்து நீலியாம்பட்டி செல்லும் வழியில் உள்ள சாலப்பட்டி மலையடிவாரத்தில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
அதன் அடிப்படையில் முத்தையா தலைமையில் காவலர்கள் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு மரங்களுக்கு இடையே ஒருவர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின் காவலர்கள் அந்த நபரை நோக்கி நெருங்கி சென்ற போது அந்த நபர் யாரும் கிட்டே வராதீர்கள், வந்தால் சுட்டு விடுவேன் அல்லது வெடிகுண்டு போட்டு விடுவேன் என்று மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் அவரை பிடிப்பதற்காக காவல் துறையினர் அவர் அருகே நெருங்கி சென்ற போது, அந்த நபர் கையில் வைத்து இருந்த பொருளை வெடிகுண்டு என்று கூறி வீசியதாக சொல்லப்படுகிறது. அது தொட்டியம் காவல் நிலைய முதல்நிலை காவலர் ராஜேஷ் குமார் என்பவரின் இடது தோள்பட்டையில் விழுந்து காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
பின்னர், அந்த நபர் எரிந்த பொருள் வெடிகுண்டு இல்லை பெரிய கல் என்று தெரியவந்தது உள்ளது. தொடர்ந்து அந்த நபர் போலீஸார் மீது துப்பாக்கியை நீட்டி சுட முற்படும் போது காவல் ஆய்வாளர் முத்தையன் தற்காப்பிற்காக தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் அந்த நபரின் கால் முட்டிக்கு கீழ் சுட்டுள்ளார்.
அதனையடுத்து அந்த நபர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனடியாக, அவரை பிடித்து விசாரித்ததில், அவர் பெயர் அலெக்ஸ் (எ) அலெக்சாண்டர் எனவும் திருச்சி மாநகரம் அரியமங்கலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததாக போலீசார் கூறினர்.
மேலும் காயம் பட்ட ரவுடி அலெக்ஸ் (எ) அலெக்சாண்டர், சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காயப்பட்ட காவலர் ராஜேஸ் குமார் சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக இருவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து முசிறி டிஎஸ்பி யாஸ்மின் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் மேலும் ஒருவரை கைது செய்த என்ஐஏ.. பின்னணி என்ன?