திருச்சி மலைக்கோட்டை வடக்கு வீதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றபோது ஆம்புலன்ஸில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை கடத்தி சென்றது. அப்போது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸை விரட்டி சென்றனர். ஆனால் ஆம்புலன்ஸ் மின்னல் வேகத்தில் சென்றது.
இதைத்தொடர்ந்து பேராசிரியையின் பெற்றோர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கடத்தல்காரர்களை தேடிவந்த நிலையில், துவரங்குறிச்சி அருகே அந்த கும்பல் மகாலட்சுமியை விட்டுச் சென்றது. இதையறிந்த காவல் துறையினர் அங்கு சென்று அவரை மீட்டனர்.

பின்னர் பேராசிரியையிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான வணக்கம் சோமு, தனது ஆதரவாளர்களுடன் பேராசிரியையை கடத்தியது தெரியவந்தது. அவர் ஏன் கடத்தினார், பேராசிரியைக்கும், வணக்கம் சோமுவுக்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கணவரை சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் கைகுழந்தையுடன் காவல்நிலையத்தில் புகார்