திருச்சி: உறையூர் பகுதியைச் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் இன்று மதியம் திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடையில் தனியார் உணவு டெலிவரி நிறுவனம் மூலம் மதிய உணவுக்காக சிக்கன் 65 பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த பிரியாணியைப் பிரித்துப் பார்த்த போது கெட்டு போய் துர்நாற்றம் வீசியது.
உடனடியாக திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி கடைக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவர்களது கடை பிரியாணி கெட்டுப் போனதைக் கூறியுள்ளார். பிறகு ஒரு மணி நேரம் ஆகியும் கடை ஊழியர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால் ஆண்ட்ரூ நேரடியாகக் கெட்டுப்போன உணவை எடுத்துக்கொண்டு திண்டுக்கல் தலப்பாக்கட்டி கடைக்குச் சென்று புகார் கூறியுள்ளார். கடை நிர்வாகம் உணவைச் சூடாக பேக் செய்ததால் கெட்டு விட்டது என்று அலட்சியமாகப் பதில் அளித்துள்ளனர்.
அந்த பதிலை ஏற்றுக் கொள்ளாத ஆண்ட்ரூ நேரடியாக உணவு மற்றும் மருந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக பிரியாணி கடைக்கு வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிரியாணி கடையை அதிரடியாகச் சோதனை செய்தனர். அந்த சோதனையில் திண்டுக்கல் தலப்பாகட்டி கடையில் கெட்டுப்போன 3 கிலோ அசைவ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரியாணி கடைக்கு அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இதற்காக பாதிக்கப்பட்ட நபர் ஒரு வீடியோ காட்சியைப் பதிவு செய்து, அசைவ உணவுகளை வெளியில் வாங்கி சாப்பிடும் போது உடனடியாக அதனைச் சோதித்து சாப்பிட வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், கெட்டுப் போன உணவு தொடர்பாக அந்த நிறுவனத்திடமும் கேட்டு அது தொடர்பாக உணவு மருந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் புகாரை தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபகாலமாக அசைவ உணவு மற்றும் பாஸ்ட் ஃபுட் கடைகளில் கெட்டுப் போன உணவுகள் விற்பனை செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும் பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: “தமிழகத்தில் ஒற்றை பெற்றோர் உள்ள குழந்தைகள் அதிகம்” - தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் பேட்டி!