தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் நேற்றிரவு தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். குடும்பத்தினருடன் திருச்சி சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்தார். இதன்பின்னர் இன்று காலை 11.20 மணியளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வந்த சந்திரசேகர ராவுக்கு, கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர் தலைமையில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ரங்கா கோபுரத்திலிருந்து பேட்டரி கார் மூலமாக ரங்கநாதர் கோயில் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.
முதலில் கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்த சந்திரசேகர ராவ், பின்னர் ஆரியபட்டாள் வாசல் வழியாக மூலஸ்தானம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்தார். இவரது வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் சந்திரசேகர ராவுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்நது இன்று மாலை நான்கு மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, சந்திரசேகர ராவ் சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.