தமிழ்நாடு திருக்கோயில்கள் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், சங்கத்தின் மாநில தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
பின்பு, இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சம்பத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட இந்து சமய அறநிலையத் துறையின் செயல் அலுவலர்களுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும். தனிப்பட்ட முறையில் 17 செயல் அலுவலர்கள் மீது இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றச்சாட்டுகளை சுமத்தியது கண்டிக்கத்தக்கது.
திருக்கோயில்களின் நிலையை உயர்த்தி, செயல் அலுவலர்கள் பணியிட எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். செயல் அலுவலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதேபோல் 17(ஏ)ன் கீழ் நடவடிக்கைகளை ஆணையர் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் தேவையற்ற தற்காலிக பணிநீக்கத்தை தடுக்க முடியும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து புதிய நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்” என்றார்.