திருச்சி மாவட்டம், மணப்பாறை தமிழ்த் தேசிய கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் உலகநாதன். இவர், மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி, அடிக்கடி காவல் நிலையம் சென்று வருபவர்.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாகக் கடந்த ஒன்றரை மாதங்களாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதைக் கைவிட்டிருந்தார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை 'ஜல் சக்தி அபியான்' துறையுடன் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டித்து மணப்பாறை சிவன் கோயில் அருகேயுள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி, நேற்று (மே.10) ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையிலான காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, காவல் துறையினர் வருவதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உலகநாதன் தப்பித்துக்கொள்ள அவர்கள் மீது கற்களை வீசி தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நிலைமையை அறிந்து சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் உலகநாதனை சுற்றி வளைத்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : 'இது அன்னை கொடுத்த தைரியம்'- பினராயி விஜயன்