தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. அதில் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமராஜா, "கடந்த 9 மாதங்களாக கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் காய்கறி சந்தைகள் தற்காலிக இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 90 விழுக்காடு காய்கறி சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்டு விட்டன. 10 விழுக்காடு கடைகள் திறக்கப்படாமல் இருப்பதில், திருச்சி காந்தி மார்க்கெட்டும் ஒன்று.
காந்தி மார்க்கெட் தொடர்பாக தனி நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் காரணமாக காந்தி மார்க்கெட்டை திறக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை நவம்பர் 26ஆம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் வியாபாரிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும். இதற்கு முன்னோட்டமாக திருச்சியில் தற்காலிக சந்தைகளில் காய்கறி விற்பனையை நிறுத்தி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
தீர்ப்பு சாதகமாக வரவில்லையென்றால் மாநிலம் முழுவதும் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஆதரவாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். அதேபோல் ஆன்லைன் வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
220 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் மூலம் வர்த்தகம் நடைபெற்றதாக பொய் தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் வியாபாரிகளின் வர்த்தகத்தை சூறையாடுகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் வியாபாரிகளின் கடைகளை இடிக்கும் செயலை கைவிடவேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: குளம்போல் நிரம்பிய ஓடுபாதை : தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்!