திருச்சி சுப்பிரமணியபுரத்தில் கூட்டுறவுத் துறையின் சிறப்பு பல்பொருள் அங்காடி திறப்பு விழா மற்றும் சிங்காரத் தோப்பு பகுதியில் கூட்டுறவுத் துறையின் பெட்ரோல் பங்க் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவற்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு தேசம் ஒரு ரேஷன் கார்டு என்ற திட்டம் காங்கிரஸ் - திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. இதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருந்தபோதுதான் மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு கையெழுத்திடப்பட்டது. ஆனால் இன்று அதே திட்டத்தை எதிர்த்து திமுகவினர் போராட்டம் நடத்துகிறார்கள்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தில் முன்னுரிமை அற்றவர்களுக்கு ரேஷன் அரிசி கிடையாது என்று இருந்தது. பின்னர், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு இச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அனைவருக்கும் ரேஷன் அரிசி வழங்க வழிவகை செய்தார். இத்திருத்தத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு தான் முன்னுரிமை அல்லாதவர்களுக்கும் கூடுதல் விலையில் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான் இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதனால் தமிழநாட்டிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
ப.சிதம்பரம் ஊழலுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி தற்போது ரேஷன் கார்டு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் மூலம் 5000 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு ஏற்பட்டுள்ள நல்ல பெயரை ஏற்றுக்கொள்ள முடியாமல், ஸ்டாலின் என்னையும், முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
200 தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவேன் என்று கூறும் அவர், ஒரு திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் பேசக்கூடாது. முதலமைச்சர் ஆவேன் என்று ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆனால் அவரால் வரவே முடியாது. ரஜினி அரசியலுக்கு வந்து கட்சி தொடங்கியவுடன் தான் அது குறித்து விமர்சனம் செய்ய முடியும். அவர் நல்ல கலைஞர், அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது" என்றார்.