திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி கோயிலில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவின் இரண்டாம் நாள் உற்சவம் கோலாகலமாக நடந்துவருகிறது. முத்து கிரீடம் வைர அபய ஹஸ்தத்துடன் நம்பெருமாள் பக்தர்களுக்கு அர்ஜுன மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுந்தம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவின் பகல் பத்து இரண்டாம் நாள் திருவிழாவான இன்று(டிச.24) உற்சவர் நம்பெருமாள் முத்து கீரிடம், வைர அபய ஹஸ்தத்துடன், பவழ மாலை அடுக்கு பதக்கங்கள், முத்து சரம், அண்ட பேரண்ட பட்சி மாலை திருவாபரணங்கள் சூடியபடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.
கோவிந்தா கோபாலா வெங்கடா பிரபு மந்திரம் முழங்க மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் அர்ஜுன மண்டபம் சென்றடைந்தார். முக்கிய நிகழ்ச்சியான வைகுந்த ஏகாதேசி பெருந் திருவிழா வரும் ஜனவரி 2ஆம் தேதி நடைபெறுகிறது. இன்று காலை 8 மணி முதல் 11.30 மணி வரை அர்ஜுன மண்டபத்தில் பொதுமக்கள் பெருமாளை தரிசனம் செய்யவும் பின்னர் 4 மணி முதல் 6 மணி வரை தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு அர்ஜுனா மண்டபத்தில் இருந்த புறப்பட்டு நம்பெருமாள் மீண்டும் 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
அரையர் சேவை: வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழாவை முன்னிட்டு மூலவர் பெரிய பெருமாள் முத்தாங்கி சேவையில் காட்சியளித்து வருகிறார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் இத்திருவிழாவை பார்க்க வருகை தருவார்கள் என்பதால் ஆலயத்தை சுற்றி குடிநீர் கழிப்பறை போன்ற ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஆலயத்தின் உட்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் சுமார் 292 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கார்த்திகை கோபுரம் முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசி: ரத்தின நீள்முடி கிரீடத்துடன் காட்சியளித்த ஸ்ரீரங்கம் பெருமாள்