காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கிய அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவுபெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தரிசனத்தை தற்போதுவரை ஒரு கோடிக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும் பலர் காஞ்சிபுரம் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
இவர்களின் கவலையை போக்கும் வகையில் ஸ்ரீரங்கம் தெற்கு வாசலில் உள்ள ஆரிய வைசிய தர்ம சத்திரம் கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் அத்திவரதர் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென்று பிரத்யேகமாக அத்திவரதர் திருவுருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அத்திவரதர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன. நேற்று தொடங்கிய இந்த அத்திவரதரின் தரிசனம் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் வனிதா கிளப், வாசவி மாதர் சங்கம் ஆகியவை இணைந்து செய்துள்ளன. முதல் நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் ஸ்ரீரங்கம் வந்து அத்திவரதரை தரிசித்துச்சென்றனர்.
இச்சங்கத்தினர் சார்பில் சில தினங்களுக்கு முன்பு கன்னிகா பரமேஸ்வரி தெய்வத்திற்கு ஒரு கோடி வளையல் அலங்காரம், ஒரு லட்சம் மாவிளக்கு வழிபாடு, ரங்கோலி அலங்காரம் என 17 மணி நேர தொடர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஃப்யூச்சர் கலாம் புக்ஸ் ஆஃப் ரெக்கார்டு, யுனிவர்சல் அச்சீவர் புக் ஆஃப் ரெக்கார்டு ஆகியவற்றில் இந்த மூன்று சாதனைகளும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழாவும் நேற்று நடந்தது. சங்கத் தலைவி ஸ்ரீஜெயந்தி, செயலாளர் ராதா லட்சுமி, பொருளாளர் கல்பனா ஆகியோர் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.