திருச்சி: தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதிகாலை முதல் பக்தர்கள் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் இன்று (நவ.12) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காலை 5.30 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. புத்தாடைகள் அணிந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், காலை 5.30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. பின், உச்சிப் பிள்ளையார் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மாணிக்க விநாயகருக்கு அருகம்புல் மாலைகளைக் கொடுத்து பக்தர்கள் அர்ச்சனை செய்து சிறப்பு வேண்டுதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று மாலை உச்சிப் பிள்ளையார் சன்னதியில் தீபாவளி பண்டிகை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற உள்ளது. திருச்சியில் உள்ள முக்கிய கோயில்களான ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் வெக்காளியம்மன் மற்றும் நாச்சியார் கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆகிய கோயில்களில் பொதுமக்கள் காலையில் இருந்தே சாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் திருச்சி மாநகர் முழுவதும் பட்டாசு வெடிக்கின்ற காட்சியைக் காண ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் மலைக்கோட்டைக்கு வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்..! கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு..!