திருச்சி: சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கத்தார் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதும், அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
விமானத்தில் வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (ஜூலை 07) திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் (Intelligence Customs Officers) அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது 8 பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அதில் வாசனை திரவியம் தெளிக்கும் பாட்டில்கள், கைப்பை மற்றும் உணவுப்பொருளில் மறைத்து வைத்து தங்க தகடுகள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. அதில் மெல்லிய தட்டு வடிவிலான 1,313.00 கிராம் 24 காரட் தங்கமும், 22 காரட் தங்கம் 25.00 கிராம் என மொத்தம் 1.3 கிலோ எடையுள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
இதன் மதிப்பு 79.12 லட்சம் ரூபாய் மதிப்பு, என்பது தெரிய வந்து உள்ளது. தங்கம் கடத்தி வந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் இதற்கு முன்பு கடத்தலில் ஈடுபட்டுள்ளனரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் அவர்கள் மீது உள்ளதா? இவர்களுக்கு பின்புலமாக யார் செயல்படுகிறார்கள்? எந்த நோக்கத்திற்காக தங்கங்களை சட்ட விரோதமாக கடத்தி செல்கின்றனர்? என பல்வேறு கோணங்களில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல், வெளிநாட்டு கரன்சிகள், பறவைகள், உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் சோதனை நடத்தி, கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்தாலும், தொடர்ந்து தங்கம் மற்றும் கரன்சி நோட்டுகளை கடத்தலில் ஈடுபட்டு வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவர்கள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: திருமணமான மறுநாளில் குழந்தைக்கு பிறந்தநாள் விழா: அண்ணாமலை தலைமையில் நடந்த கல்யாண கலாட்டா!