திருச்சி, பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபி கண்ணன். இவர், நேற்று முன் தினம் (மே.09) இரவு சுமார் ஏழு மணியளவில் தனது வீட்டின் அருகே தனது மகளுக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஆறு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், கோபி கண்ணனை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பி ஓடியது. இதில் சம்பவ இடத்திலேயே கோபி கண்ணன் உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வந்தனர். மேலும், அப்பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் கொலை கும்பலை தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கோபி கண்ணனுக்கும் எடத்தெருவைச் சேர்ந்த ஹேமந்த் குமார் என்பவருக்கும் இடையே கோயில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஹேமந்த் குமார் கொலை செய்யப்பட்டார். இதற்கு கோபி கண்ணன் திட்டமிட்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஹேமந்த் குமாரின் கொலைக்கு பழிவாங்கும் விதமாக அவரது தம்பி பிரிஜேஷ் பிரசாந்த் (22) என்பவர் தனது நண்பர்களான திருவானைக்காவலையைச் சேர்ந்த உதயகுமார் (23), நல்லதம்பி (27), சித்திக் (19), அருண் (20), சுரேஷ் (20) ஆகியோருடன் சேர்ந்து வழக்கறிஞர் கோபி கண்ணனை வெட்டிப் படுகொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.