அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் நேற்று திருச்சியில் பேரணி நடைபெற்றது.
பதிவுபெற்ற மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாரம்பரிய சித்தா, ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். அக்குபஞ்சர் மருந்துவத்துக்கும் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணி திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் தொடங்கி, ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய மருத்துவர்கள் கலந்து கொண்டனர். கோரிக்கை அடங்கிய மனுக்களை ஆட்சியர் சிவராசுவைச் சந்தித்து அளித்தனர்.
அப்போது சுப்பையா செய்தியாளர்களிடம் கூறுகையில்: 'இந்துக் கடவுள் சிவபெருமானால் சித்த மருத்துவம் 18 சித்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் பாரம்பரிய மருத்துவர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்.
நம் பாரம்பரிய மருத்துவ முறையைக் காக்க வேண்டும். மருத்துவத்தை காக்க வேண்டும் என்றால், அந்த சேவையில் ஈடுபட்டுள்ள பாரம்பரிய மருத்துவர்களையும் காக்க வேண்டும். பதிவு பெற்ற சித்த மருத்துவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வர்மக்கலையின் ஒரு பகுதியான அக்குபஞ்சர் முறையில் இரண்டு லட்சம் மருத்துவர்கள் மருத்துவ சேவையாற்றி வருகின்றனர்.
மருந்து இல்லாமல், நோய்களுக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தக்கூடிய இந்த அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு தமிழ்நாடு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும். அக்குபஞ்சர் மருத்துவத்துக்கு தனிக் கவுன்சில் அமைக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பாரம்பரிய பச்சிலை மருத்துவக் குடும்பத்திலிருந்து வந்துள்ளார்.
அதன் அடிப்படையில் தான் பாரம்பரிய மருத்துவ சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும். இத்தகைய கோரிக்கையை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா: நாட்டுப் படகில் செல்ல அனுமதி கோரி மனு