திருச்சி: கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் ரூ.1 கோடியே 69 லட்சத்து 32 ஆயிரத்து 300 மதிப்புள்ள, 2 கிலோ 932 கிராம் கடத்தல் தங்கத்தை, விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையம் தமிழகத்தின் இரண்டாவது பெரிய விமான நிலையமாகும். இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கம், கரன்சி நோட்டுகள் மற்றும் உயிரினங்களான பறவைகள் மற்றும் பாம்புகள் போன்றவைகளை கடத்தி வருவதும் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (அக். 8) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் பயணிகளை அதிரடி சோதனை நடத்தினர்.
இச்சோதனையில், பயணி ஒருவர் மலக்குடலில் மறைத்து வைத்து, 61 லட்சத்தி 21 ஆயிரத்து 500 மதிப்புள்ள, 1 கிலோ 60 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அதே விமானத்தில் பயணம் செய்த மற்றொரு குடும்பத்தினரை சோதனை செய்ததில், அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஷு மற்றும் குழந்தைகளின் உள்ளாடையில் மறைத்து ரூ.1கோடியே 8 லட்சத்து 10 ஆயிரத்து 800 மதிப்புள்ள, 1 கிலோ 872 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், நேற்று ஒரு நாளில் திருச்சி விமான நிலையத்தில், மொத்தம் ரூ. 1கோடியே 69 லட்சத்தி 32 ஆயிரத்து 300 மதிப்புள்ள, இரண்டு கிலோ 932 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இவர்கள் எந்த நோக்கத்திற்காக தங்கத்தை சட்ட விரோதமாக கடத்தி வந்தார்கள்?
அவர்களது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் உண்மையானதா? வேறு வழக்குகள் இவர் மீது எதுவும் நிலுவையில் உள்ளதா ? இவர் எத்தனை முறை விமானத்தில் வெளிநாடு சென்று வந்துள்ளார்? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீது விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி விபத்து: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பேரின் உடல்கள் தகனம்!