திருச்சி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மாவீரன் நாள் என்ற தலைப்பில் திருச்சியில் உள்ள பொன்மலை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஈழத்தில் உயிர் தியாகம் செய்த போராளிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து விழா மேடையில் சீமான் பேசுகையில், “தமிழகத்தை தமிழ் இனம் ஆட்சி செய்யும்போது ’மாவீரன் நாள்’ அரசு விழாவாக கொண்டாடப்படும். பிரபாகரன் 15 முதல் 20 ஆண்டு தமிழகத்தை ஆண்டு இருந்தால், உலக வரலாற்றில் தலை சிறந்த மாநிலமாக நம் தமிழ்நாட்டை மாற்றி இருப்பார்.
தன்னுடைய நிலத்தைப் பாதுகாக்க போராடும் விவசாயிகள் மீது குண்டாஸ் போடும் அரசு, கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் விற்பவர்கள் மீது குண்டாஸ் போடுவதில்லை. நம்முடைய மாநிலத்தில் நம்மை விட வெளி மாநிலத்தவர்கள்தான் அதிக அளவு வேலை செய்கிறார்கள்.
தமிழ் மொழி செத்து வருகிறது. இதைப் பற்றி இங்குள்ள ஆட்சியாளர்கள் என்றாவது கவலைப்பட்டது உண்டா? மாவீரன் நாளில் ஒரு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தாதவர்கள், ஓட்டு கேட்டு வருகிறார்கள். தமிழர்கள் செய்த தியாகங்கள் கொஞ்சம்நஞ்சம் அல்ல. வரலாறுகள் கூட பதிவு செய்ய பயப்படும் அளவுக்கு தியாகங்களைச் செய்துள்ளனர்.
நமக்கென்று ஒரு நாடு இல்லை என்றால் நாம் அடிமையாகவும், தன்மானம் இழந்தும் வாழ நேரிடும். நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கு போராடிதான் ஆக வேண்டும். மரணம் என்பது நம் வாழ்வில் ஒரு முறைதான் வரும். அந்த மரணத்திற்குப் பயந்து, மானத்தை இழந்து விட முடியாது என்றும், இருப்பதற்கு பயந்து இனத்தை அழித்துவிட முடியாது என முழங்கியவர் தீலிப். இது போன்ற தத்துவ முழங்கள்தான் நம் மாவீரர்களை மண்ணின் விடுதலைக்காக மரணத்தை தழுவச் செய்தது.
நாம் இன்றைக்குச் சுதந்திரமான காற்றை சுவாசிக்கிறோம் என்றால், அவர்கள் தங்களுடைய சுவாசிப்பை நிறுத்திக் கொண்டார்கள். உலகின் மிகப்பெரிய நாடுகள் கூட இத்தனை உயிர்த் தியாகங்கள் செய்து இருக்க மாட்டார்கள். ஒரு சிறிய நிலப்பரப்பிற்காக நாம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் தியாகங்களை செய்து இருக்கிறோம். போரின்போது 100 பேரைக் கொல்வது வீரமல்ல. தன்னுடைய உயிரை கொடுத்தாவது, மற்ற ஒரு உயிரை காப்பாற்றுவதுதான் அறம் சார்ந்த வீரம். அத்தையாக மாவீரர்களை நினைவு கூறும் நாள் இந்த மாவீரன் நாள்” என்று பேசினார்.
இதையும் படிங்க: பிரபாகரனின் மகள் என வெளியான வீடியோ குறித்து பழ.நெடுமாறன் கூறியது என்ன?