திருச்சி விமான நிலையத்தில் 2018ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி மதிமுகவினரும், நாம் தமிழர் கட்சியினரும் மோதிக்கொண்டதில் மதிமுக தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்தது.
இது தொடர்பாக திருச்சி விமான நிலைய காவல்துறையினர் இருதரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில், நாம் தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபு, கரிகாலன், இனியன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்று திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஷகிலா முன்பு சீமான் உள்ளிட்ட 14 பேரும் ஆஜர் ஆனார்கள். இதனையடுத்து அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை மீது தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவர் சிலைக்கு விபூதி அணிவித்து, காவி வேட்டிகளை கட்டிவிடுவது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
திருவள்ளுவருக்கு காவி அணிவித்து, உலகப் பொது மறையை மறைத்து தன்வயப்படுத்த நினைக்கிறது பாஜக. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திற்கு பின்புதான் இந்து, இந்தியா என்ற வார்த்தைகள் உருவானது. இதனை சட்ட ரிதீயாக அணுகத் தயாராக இருந்தால் இந்து யார் என்பது விளங்கும்.
மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது. மருத்துவர்களை பணியிட மாற்றம் செய்வது பழிவாங்கும் நடவடிக்கையை அரசு உடனடியாக கைவிட வேண்டும். ரஜினிகாந்த் பாஜகவிற்கு வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்துள்ளனர்.
அவரைவிட திறமையான சாதித்த கமல்ஹாசன், இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்டோர் உள்ளனர்" என்று கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க:
‘திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை’ - ஸ்டாலின்