திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள வடக்கு நாகமங்கலம் பகுதியில் 16 வயது சிறுமி கைகள் கட்டப்பட்ட நிலையில், சடலமாகக் கிடந்தததைப் பார்த்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து மணிகண்டம் காவல் துறையினருக்குத் தகவல்கொடுத்தனர்.
இதையடுத்து, தகவலின் பேரில் காவல் துறையினர் விரைந்துசென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, திருச்சி மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்றுவந்தார் என்பதும் தெரியவந்தது.
கைகள், வாய் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்பு
டிசம்பர் 31ஆம் தேதி இரவு முதல் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் மணிகண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், காணாமல்போன பள்ளி மாணவி கைகளும், வாயும் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை கொலை செய்தவர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணிடம் செயின் பறிப்பு முயற்சி: லாவகமாக தப்பிய சிசிடிவி காட்சி வெளியீடு!