திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட பழையகோட்டை, அனுக்காநத்தம், கல் கொத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டுவருகிறது. இதில் திட்டப்பணியாளர்கள் முறையான வேலை, கூலி வழங்குவதில்லை என வையம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியாளர்களுக்கு முறையாக குளத்து வேலை அளிப்பதில்லை என்றும், பண்ணை குட்டை, வரப்பு கட்டும் பணிகளை மட்டுமே ஊராட்சி நிர்வாகம் அளிப்பதாகவும், அந்தப் பணியாளர்களுக்கு வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். கூலித்தொகையினை நில உரிமையாளர்கள் மிரட்டி பெற்றுக் கொள்வதாகவும் ஊராட்சி ஆணையர்களிடம் புகார் அளிக்கப்பட்டது.
அப்போது பொதுமக்களிடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் வங்கிப் பணம் பட்டுவாடாவில் முறைகேடு நடப்பது உண்மைதான் என்றும், அவற்றை வங்கி மேலாளர்கள் தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்றும் பதிலளித்தனர்.
தற்போது பண்ணைக் குட்டை, வரப்பு கட்டும் பணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பணிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இப்பணிகளைச் செய்யமாட்டோம் எனக் கூறி பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.