சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் என்ற விமானம் திருச்சிக்கு வந்தது. இதில் வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பையா, கணேசன், ஜோசப் ஆகிய மூன்று பயணிகள் கட்டி வடிவிலான 446 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு ரூ.16.13 லட்சம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமான பயணிகளிடமும் வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவைச் சேர்ந்த அனிஷா பானு என்பவர் அணிந்து வந்த 280 கிராம் மதிப்புள்ள 4 தங்க வளையல்கள், ஒரு செயின் மற்றும் பிரேஸ்லெட்டை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10.07 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.26.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.