திருச்சியில் அபின் என்னும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படையினர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் போதைப் பொருளான அபின் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரில் வந்த இரண்டு பேரையும் காவல் துறையினர் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் பெரம்பலூரைச் சேர்ந்த அடைக்கலம், ஜெயபிரகாஷ் என்பது தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் பெரம்பலூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் மோகன் பாபு, ஆறுமுகம், பாலசுப்பிரமணியன், திருச்சி மான்பிடி மங்கலத்தைச் சேர்ந்த அத்தடையான் ஆகிய 4 பேரையும் காவல் துறையினர் அழைத்து விசாரணை நடத்தினர். அவர்களிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அடைக்கலம், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் போதைப் பொருளான அபினை தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 800 கிராம் அபின் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் சர்வதேச மதிப்பு 15 லட்சம் ரூபாய் ஆகும். பிடிபட்ட ஆறு பேரிடமும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சித்தா மருத்துவருக்கு சொந்தமான அந்த காரை போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஏமாற்றி வாங்கி வந்தது தெரியவந்தது.
அதனால் இந்த கடத்தல் சம்பவத்தில் சித்த மருத்துவருக்கு தொடர்பு இல்லை என்பதை காவல் துறையினர் முடிவு செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்த மருத்துவரைத் தவிர இதர 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.