புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ராப்பூசல் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன், சாரதா தம்பதி. இவர்களின் மூத்த மகள் உமா (20). இவர் திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா கண் மருத்துவமனையில் 3ஆம் ஆண்டு பயிற்சி செவிலியாக மகளிர் விடுதியில் தங்கிப் படித்துவந்தார்.
இவருக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன் உறவினர் ஆனந்த் (29) என்பவருடன் திருமணம் நடந்தது.
இவரது கணவர் ஆனந்த் திருச்சியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்துவருகிறார். நேற்று (மார்ச் 6) இரவு உமாவின் அக்கா பிரவீனா என்பவருக்கு கண் மருத்துவமனையிலிருந்து தொலைபேசி மூலம் அழைப்புவந்தது.
அதில் உமா இறந்துவிட்டதாகவும், அவரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ளதாககவும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உமாவின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர் மகாத்மா கண் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் சரக காவல் துறை உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, தில்லைநகர் காவல் துறையினர் ஆகியோர் விரைந்துவந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் உமாவின் உடற்கூராய்விற்குப் பிறகு எப்படி இறந்தார்? என்பது தெரியவரும். ஆர்டிஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது எனக் காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த உமா சமீபத்தில் விருப்பமில்லாமல் உறவினரைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றார் எனத் தெரியவந்தது. தற்போது இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பழிக்குப்பழி: மானாமதுரை காவல் நிலையம் முன்பு ஒருவர் படுகொலை!